Sunday, April 5, 2009

எதற்காக ?

நான்கு பிள்ளைகள் எதற்காக ?
தனக்குப் பின் நாட்டை ஆளவும் , தான் நல்ல கதி அடைய உதவவும் , தசரதன் கேட்டது ஒரு பிள்ளைதான் . தேவர்கள் கேட்டது ராவணனை வதம் செய்ய ஒரு ராமன் தான் . அப்படியிருக்க , பகவான் ஏன் , தம் அம்சங்களுடன் , நான்கு பிள்ளைகளாகத் தோன்றினார் .
தர்மம் நான்கு வகைப்படும் . அந்த நான்கு வகை தர்மங்களையும் மக்களுக்கு அனுஷ்டித்துக் காட்டத்தான் அந்த நான்கு சகோதரர்கள் தோன்றினார்களேயன்றி , ராவணனை வதம் செய்ய அல்ல .
அந்த நான்கு வகை தர்மங்கள் யாவை ?
முதலாக வருவது சாமானிய தர்மம் . அதாவது , பிள்ளைகள் பெற்றோர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் , சீடன் குருவிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் , மனைவி கணவனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் போன்ற சாமானிய தர்மங்களைச் சொல்லுவது . இதைத் தான் ராமன் அனுஷ்டித்துக் காட்டினான் .
சாமானிய தர்மங்களை முழுமையாகச் செய்துகொண்டு வந்தால் , கடைசியில் ஒரு நிலைவரும் . அந்த நிலையில் , பகவானுடைய பாதங்களைத் தவிர வேறு ஒன்றும் சதம் அல்ல என்கிற நினைப்பு ஏற்படும் . அத்தகைய தர்மத்திற்கு சேஷதர்மம் என்று பெயர் . அதைத்தான் அனுஷ்டித்துக் காட்டினான் லட்சுமணன் .
மூன்றாவது தர்மத்திற்கு விசேஷ தர்மம் என்று பெயர் . அதாவது தூரத்தில் இருந்துகொண்டே , எப்பொழுதும் பகவான் ஞாபகமாகவே இருப்பது . இது முன் சொன்ன சேஷ தர்மத்தைவிட கடினம் . அதைச் செய்து காட்டினான் பரதன் .
நான்காவது தர்மத்திற்கு விசேஷ தர தர்மம் என்று பெயர் . இதைக் கடைபிடித்தான் சத்ருக்கனன் . பகவானைவிட அவனுடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதுதான் இந்த தர்மம் . அதனால்தான் சத்ருக்கனன் , பாகவத உத்தமனாகிய பரதனை விடாமல் பின்பற்றி , அவனுக்குத் தொண்டுகள் செய்தான் .
ஆக , பகவான் நான்கு அவதாரர்களாகத் தொன்றியது இந்த நான்கு தர்மங்களையும் அனுஷ்டித்துக் காட்டத்தான் .
-- சுந்தர்குமார் .சுப்ரமண்ய நகர் , ஸ்ரீ சங்கர ஜயந்தி மகோத்சவத்தில் . மே 20 , 1990 .

2 comments:

வழிப்போக்கன் said...

என்றும் ஒரு தகவல் மிகவும் ரசமாக இருக்கிறது. படிப்பதற்குச் சுவையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
நான்கு தர்மங்கள் பற்றிய செய்தி ஸ்ரீ சுந்தர்குமார் மட்டும் சொன்னதில்லை. அநேகமாக எல்லாப் புராணிகர்களும் சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன்.
ஏன், நேற்று முன் தினம், தாமல் ஸ்ரீ ராமகிருஷ்ணன் அவரது சகோதரி தாமல் ஸ்ரீமதி பெருந்தேவி ஆகிய இருவரும் சேர்ந்து நிகழ்த்திய இராமாயணப் ப்ரவசனத்திலும் இதைக்கேட்டேன்.
எத்தனை முறை யார்யார் சொன்னாலும் அறவுரை அறவுரைதான். திரும்பக் திரும்பக் கேட்கவேண்டியதுதான்.
முகில்வண்ணன்

க. சந்தானம் said...

கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ,' என்றும் ஒரு தகவல் ' பற்றிய தங்களது பாராட்டுக்கு நன்றி !