Thursday, April 2, 2009

ஏழும் , எழுபதும்

இருவரும் சிவனடியார்கள் , இருவரும் தங்கள் தீந்தமிழ்ப் பாக்களால் பரமசிவனை மகிழ்விப்பார்கள் . ஒருவருக்கு வயது ஏழு , இன்னொருவருக்கு வயது எழுபது . இருவரும் சந்தித்ததில்லை . ஆனால் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டுள்ளனர் . அந்த எழுபது வயதுக் கிழவர் ஏழு வயதுச் சிறுவனைக் காணத் துடிக்கிறார் . அந்த எழுபது வயதுக் கிழவரைக் காணத் துடிக்கிறான் , ஏழு வயது சிறுவனும் .
ஆம் , சம்பந்தரும் , அப்பரும்தான் இந்தச் சிவனடியார்கள் . ஒருநாள் இவர்கள் சந்திக்க , இருவரும் சேர்ந்து பல தலங்களுக்குச் செல்லுகிறார்கள் .ஒருநாள் வேதாரண்யம் வந்து சேர்கிறார்கள் . அங்கு கோயில் பூடிக் கிடக்கிறது !
உடனே , சம்பந்தர் , அப்பரைப் பார்த்து , " தாங்கள் சில பதிகங்கள் பாடுங்கள் , கதவு திறக்கும் " என்று சொல்லுகிறார் .
உடனே அப்பர் பதினாறு பதிகங்கள் பாட , கதவு திறக்கிறது . இருவரும் உள்ளே சென்று , சுவாமி தரிசனம் செய்கிறார்கள் . அப்பொழுது ஒரு அசரீரி கேட்கிறது . " மீண்டும் பதிகம் பாடி, கதவை மூடுக " என்று சொல்லுகிறது .
அப்பொழுது அப்பர் , சம்பந்தரைப் பார்த்து , " தாங்கள் பதிகம் பாடுங்கள் , கதவு மூடிக் கொள்ளும் " என்கிறார் .
சம்பந்தர் ஒரு பதிகம் பாடி முடித்ததுதான் தாமதம் , கதவு மூடிக்கொள்கிறது .
உடனே அப்பர் , சம்பந்தரைப் பார்த்து , " தாங்கள்தான் என்னை விட அதிக பக்திமான் . தங்கள் ஒரு பதிகத்திற்கே கதவு மூடிக்கொண்டது . நான் கதவைத் திறக்க பதினாறு பதிகங்கள் பாடவேண்டி வந்தது " என்கிறார் .
அதற்கு சம்பந்தர் " இல்லை , தாங்கள்தான் என்னைவிடச் சிறந்த பக்தர் . ஆண்டவன் தங்கள் பதிகங்களைத்தான் அதிகம் கேட்க விரும்பினான் . அதனால்தான் தங்களைப் பதினாறு பதிகங்கள் பாடவைத்தான் " என்று சொல்லுகிறார் .
அப்பர் , சம்பந்தர் போன்ற மகான்களே , " நீங்கள்தான் என்னைவிடச் சிறந்த பக்தன் " நீங்கள்தான் என்னைவிடச் சிறந்த பக்தன் " என்று வாதாடும்போது , நாமெல்லாம் எந்த மூலை .
-- ஹரிதாஸ் கிரி . காஞ்சியில் , பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் , ஸ்ரீ ஞாநேச்வரி என்னும் நூலை வெளியிட்டபோது . ஜூன் 27 . 1990 .

No comments: