Wednesday, December 10, 2008

முசோலினி !

உலக மகா யுத்தத்தில் ஹிட்லரின் தோளோடு தோள் நின்றவர் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி .
போரில் முசோலினி தோற்ற பிறகு , முசோலினி ஒரு வேனில் ஏறிக்கொண்டு எல்லையைக் கடந்து தப்பிக்க முயன்றார் . அவரோடு இணைபிரியாத காதலி க்ளாரா பெட்டாசி !
1945-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி அதிகாலையில் முசோலினியின் வேன் ஊர் எல்லையைத்தாண்ட முயன்றபோது அவருக்கு எதிரான புரட்சிப் படையினரால் வேன் தடுத்து நிறுத்தப்பட்டது . புரட்சிப் படையின் இளம் வீரர்கள் நுசோலினியைத் திகைப்போடு அடையாளம் கண்டு கொண்டார்கள் .
இருவர் வேனுக்குள் ஏறி முடங்கி , நடுங்கி அமர்ந்திருந்த முசோலினியைக் காதலியோடு கீழே இழுத்துக்கொண்டு வந்தனர் . ' இவனைக் கைது செய்து நேச நாடுகளிடம் ஒப்படைத்துவிடலாம் ' என்று சிலர் சொன்னார்கள் . ' நோ !' இங்கேயே தீர்த்துக் கட்ட வேண்டும் ' என்றார்கள் பலர் .
முடிவு நெருங்கிவிட்டதைப் புரிந்து கொண்ட முசோலினி மண்டியிட்டு , ' என்னைக் கொல்லாதீர்கள் ...' என்று கெஞ்சிக் கதற ஆரம்பித்தார் . அவருடைய கால்சராய் சிறுனீரால் ஈரமானதாகத் தகவல்.....
எதிரே நின்ற இளைஞர்களின் கைத் துப்பாக்கிகள் நிமிர்ந்தன . மண்டியிட்டிருந்த முசோலினி , அவருடைய காதலி இருவருடைய உடல்களும் சல்லடையாக்கப்பட்டு மல்லாக்க விழுந்தன .
பிற்பாடு அவர்களுடைய உடல்களைக் கொண்டு சென்று , மிலான் நகரின் பிரதான வீதியில் நட்ட நடுவே போட்டார்கள் . பல்லாயிரக்கணக்கான இத்தாலிய மக்கள் மௌனமாக உடல்களை வெறித்துப் பார்க்க....
திடீரென்று ஒரு சாமான்யப் பெண் , முசோலினியின் உடலருகே வந்து ' தூ ' என்று துப்பினாள் . பிறகு , பல பெண்கள் நெருங்கிச் சென்று துப்பிவிட்டு , முசோலினியின் உடலை எட்டி உதைத்தனர் . சில இளைஞர்கள் உடல்மீது சிறுநீர் கழித்தார்கள் .
இருவருடைய உடல்களும் இழுத்துச் செல்லப்பட்டு , ஒரு பெற்றோல் பங்க் வாயிலில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டன . கிளாரா பெட்டாசியின் பாவாடை கீழ்னோக்கித் தொங்கியதால் , அவளுடைய தொடைப்பகுதியும் உள்ளாடையும் தெரிய.... பரிதாபப்பட்ட ஒரு இளைஞர் , கம்பத்தின்மீது ஏறி பாவாடையைச் சரிபடுத்தி , ' பின் ' ஒன்றைப் பொருத்திவிட்டு இறங்கினார் .
லேட்டாகத்தான் முசோலினியின் இந்தக் கொடூரமான முடிவு ஹிட்லருக்குத் தெரியவந்தது . ஹிட்லர் உடல் நடுங்கியது .
--மதன் . மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் ! என்ற நூலில்

No comments: