Monday, June 30, 2008

ஐந்தாம் படை !

ஸ்பெயின் உள் நாட்டுப் போரின் போது இராணுவத் தலைவரான 'எமிலியோ மோலா' நாங்கு வகைப் படைகளுடன் தலைநகரான மேரிட்டை நோக்கிப் படையெடுத்துச் சென்றார். ஸ்பெயின் மக்களும் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட 'ஐந்தாம் படை' நாட்டின் உள்ளே இருக்கிறது என்றார். அவர் அவ்வாறு கூறியது பிரபலமடைந்து எதிராளிக்கு ஆதரவாக உள்ளிருந்து வேலை செய்பவர்களுக்கு "ஐந்தாம் படை" என்னும் பெயர் நிலைத்துவிட்டது.

மேனகா காந்தி

"ஒரு உயிரின் அழிவில்தான் மற்றொரு உயிர் வாழவேண்டும்" என்பது இயற்கையின் நியதி. மான் வாழ தாவரங்களைப் படைத்த இயற்கைதான், புலிக்கு உணவாக மானை வைத்துள்ளது. செம்மறி ஆட்டுக் குட்டியின் மூளைப் பகுதியில் இருந்து தயாரித்துக் கொண்டிருந்த 'ஆன்ட்டி ரேபிஸ் வேக்சின்' எனும் வெறிநாய்க்கடிமருந்து மேனகா காந்தியின் கைங்கர்யத்தால் கைவிடப்பட்டு விட்டது. மனிதர்களின் உயிர்களை விட மேனகா காந்திக்கு ஆட்டுக்குட்டிகளின் உயிர்தான் பெரிதாகத் தோன்றுகிறது. அசைவ உணவு உண்ணும் எவரும் இறந்து போன பிராணிகளை உண்பதில்லை. கோழி, ஆடு, மாடு, மீன் போன்றவற்றைக் கொன்றுதான் அவற்றை உணவாக உட்கொள்கின்றனர்.
நன்றி: 'தினமலர்' (31-12-2001)

Sunday, June 29, 2008

லீப் ஆண்டு

ஓர் ஆண்டு 'லீப்' ஆண்டு என்பதைக் காண: அந்த ஆண்டு 4-ஆல் மீதியின்றி வகுபட வேண்டும். அதுமட்டுமல்லாமல் 1600, 1700, 1800, 1900 போன்ற நூற்றாண்டுகள் 400-ஆல் மீதிஇல்லாமல் வகுபட்டால் தான் ' லீப்' ஆண்டு ஆகும்.

பழமொழி

"வேலுக்கு பல் இருகும்
வேம்புக்கு பல் துலங்கும்
பூலுக்கு போகம் பொழியுமே
ஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளே
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்".

எனது சிறிய தகப்பனார் s.சபாரெத்தின முதலியார் கூறக்கேட்டது.

பழமொழி

Yesterday is but a dream, tomorrow but a vision. But today well lived makes every yesterday a dream of happiness, and every tomorrow a vision of hope. Look well, therefore, to this day!
- சமஸ்கிருத பழமொழி.

Somebody & Nobody

This is a story of four people named Every body, Somebody, Any body, and Nobody.
There was an important job to be done and Everbody was sure that Somebody would do it.
Anybody could have done it,but Nobody did it.
Somebody got angry about that because it was Everybody's job.
Everybody thought Anybody could do it ,but Nobody realised that Everybody would't do it.
It ended up that Everybody blamed Somebody when Nobody did what Anybody could have done.

--லால்குடி ஜெயராமன் தயாரித்த "குமுதம்" (08-08-1991).

Friday, June 27, 2008

எண்களில் விந்தை !

எண்கள் எப்போதுமே பொய் சொல்லுவதில்லை. அவற்றை விதவிதமாய் கையாளக் கற்றுக் கொண்டால், நம்பமுடியாத ஆச்சர்யங்கள் பல வெளியாகி கொண்டே இருக்கும்.

உதாரணத்திற்கு 421, 052, 631, 578, 947, 368 - இது ஒரு முழுத் தொகை. இதனை இருமடங்காக்கினால் என்னவரும்? மிக சுலபம். கடைசி எண்ணான 8-ஐ தூக்கி முதல் எண்ணான 4-க்கு முன்னால் போடுங்கள்.

1, 11,11,111 இந்த என்னை 9-ஆல் வகுத்தால் கிடைக்கக்கூடிய ஈவு நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஈவு:1234567.8

ஆதாரம்: நன்றி-முத்தாரம் 15-8-1986

விலங்குகள் 3 வகை !!

விலங்குகளை இருபெரும் பிரிவுகளாக விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் பிரித்து இருக்கிறார்கள். அவை:

1) டையர்னல் (Diurnal) விலங்குகள்:இந்த விலங்குகள் பகலில் நடமாடி, வேட்டையடி உணவு உண்டு இரவில் தூக்கம் கொள்கின்றன .

2) நாக்டர்னல் (Nocturnal) விலங்குகள்: இவை இரவில் நடமாடி, வேட்டையாடி உணவு உண்டு பகலில் உறங்குகின்றன.

மேலும், கிரிபஸ்குலர் (Crepuscular) என்ற விலங்குகள் பற்றி விக்கிபீடியா-வில் சமீபத்தில் படித்தேன். இவ்வகை விலங்குகள் twilight zone என்ற விடியற்காலை மற்றும் அந்தி வேளையில் நடமாடும் வகையைச் சேர்ந்த்வை.

Thursday, June 26, 2008

மூன்று சகோதரர்கள் ...

ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் மூவரும் சகோதரர்களாக இருந்தாலும் குணத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ராவணன் எப்போதும் பிறருக்குக் கெடுதலை நினைத்து, கெடுதலை செய்துவந்தான். கும்பகர்ணனோ கெடுதல் நினைக்க மாட்டான், நல்லதை நினைப்பான். ஆனால் கெடுதலைச் செய்வான். விபீஷணன் நல்லதை நினைப்பவன், நல்லதையே செய்பவன்.

- கி.வா.ஜ (23-7-1985)

கற்பூரம் / கற்பூர வீடிகா

கற்பூரத்திற்கு அக்காலத்தில் 'பளிதம்' என்ற சொல் வழக்கத்தில் இருந்தது. புத்த பிக்குகளும் உணவுக்குப் பிறகு வெற்றிலையுடன் அதைச் சேர்த்து அருந்தியுள்ளனர் என்பதை மணிமேகலை தெரிவிக்கிறது. பளிதத்தில் பலவகை இருந்ததாகவும், அதை சந்தனத்துடன் கலந்து உடலில் பூசிக் கொண்டனர் என்றும் பரிபாடல் கூறுகிறது. ஐவகை நறுமணப் பொருள்களில் கற்பூரமும் ஒன்று என சிலப்பதிகாரம் கூறுகிறது

நன்றி: வணிகமணி (௦06-10-1997).

தாம்பூலத்திற்கு மணமூட்ட, பச்சைக்கற்பூரம், ஏலரிசி, கிராம்பு, கஸ்தூரி, குங்குமப்பூ, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, பாக்கு, வால்மிளகு, சுக்கு, சுண்ணாம்பு இவைகளைத் தக்க அளவில் வெற்றிலைகளில் வைத்து "வீடிகா"(சிறு சிறு பீடா) வாகத் தயாரித்தால் அது 'கற்பூர வீடிகா'. தேவி (அம்பாள்) கற்பூர வீடிகாவைச் சுவைக்க அதன் நறுமணம் வெளியாகிறது.

லலிதா சகஸ்ர நாமம் ஸ்தோத்திரத்தில் வரும் சில வரிகள்.
நன்றி: சாவி இதழ் (02-03-1986).

Wednesday, June 25, 2008

ஹேப்பி பர்த் டே டு யூ

பிறந்த நாள் அன்று கோரசாகப் பாடும் 'ஹேப்பி பர்த் டே டு யூ' என்ற பாடலை இயற்றியவர் 'பெட்டி ஸ்மித் ஹில்' (Patty Smith Hill) மற்றும் 'மில்ரெட் ஜே ஹில்' (Mildred J Hill) என்ற சகோதரிகள் ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்காக இயற்றினர். 'மில்ரெட் ஜே ஹில்' இசையைமைத்த இப்பாடல் பிற்காலத்தில் உலககெங்கும் அது இவ்வளவு பிரசித்தமாகும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஏதாவது புழு, பூச்சி உண்டா?

திருமணமாகி சில மாதங்கள் கடந்த பெண்ணைப் பார்த்து, "என்ன, ஏதாவது புழு, பூச்சி உண்டா?" என்று சில வயதான பெண்கள் கேட்பதுண்டு. புழு, பூச்சி என்றால் என்ன பொருள்?. 'புழு' என்றால் ஆண் குழந்தையைக் குறிக்கும். புழு ஒரு இடத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வரும். ஆண் குழந்தைகள் பிறந்த வீட்டிற்குள்ளேயே தான் வாழ்வார்கள். 'பூச்சி' என்பது பெண் குழந்தையைக் குறிக்கும். பூச்சிக்கு சிறகு முளைத்ததும் வேறு இடத்திற்கு பறந்து விடும். பெண்களும் வயது வந்ததும் வேறு வீட்டிற்குப் போய்விடுவார்கள். ஏதாவது குழந்தைகளுக்கு வழி உண்டா? என்பதைத்தான் மேற்படி உண்டா? என்று கேட்கிறார்கள்.

பேராசிரியர் பா.நமச்சிவாயம். நன்றி (குமுதம் 22-06-1989).

Tuesday, June 24, 2008

தாய் நாடு

உலகம் முழுவதும் 'Mother Country ' என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால் ஜெர்மனியில் மட்டுமே 'Father Country' என்று சொல்கிறார்கள். "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே......." என்று பாரதி சொன்னதற்குரிய சிறப்பான காரணம் ஒன்று உண்டு. "தந்தையர் நாடென்ற பேச்சினிலே......" என்ற வரிக்கு அடுத்ததாக, "ஒரு சக்தி பிறக்குது முச்சினிலே" என்று சொல்லும் பொது ஆண்மை, வீரம் போன்றவற்றையும் சுட்டி காட்டுகிறார். ஆண்மை, வீரமும் பொதுவாக ஆண்களுக்கே உரியது. 'தாய்' எனப்படும் போது தாய்மை, அன்பு, பரிவு, கனிவு ஆகியவற்றையே முன் வைக்கப்படும். சக்தி, வீரம், ஆண்மை என்று சொல்லப்படும்போது தான், "தந்தையர் நாடு" என்று குறிப்பிடுகின்றார்.

Dr.அ.ச.ஞானசம்பந்தம் கூறக்கேட்டது (30-06-1988).

Monday, June 23, 2008

குழந்தையின் எடை/உயரம் அறிய...

குழந்தையின் எடையை அறிய குழந்தையின் வயதுடன் 3-ஐக் கூட்டி அந்தக் கூட்டுத் தொகையை 5-ஆல் பெருக்கவும். (வயது + 3) x 5= குழந்தையின் எடை (பவுண்டில்). குழந்தையின் உயரத்தைத் தெரிந்து கொள்ள குழந்தையின் வயதை 2-அல் பெருக்கி அந்தப் பெருக்குத் தொகையுடன் 32-ஐக் கூட்டவும். (வயது x 2)+ 32 = குழந்தையின் உயரம் (அங்குலத்தில்). இதுவே நார்மலாக இருக்கவேண்டிய உயரம்.

ஆதாரம்: 'குழந்தை நலம்'.

Sunday, June 22, 2008

வாய் - கண்

வாய்
மற்ற எந்த அவயத்தையும் விட வாய்க்குத்தான் வேலை அதிகம். ருசி பார்ப்பது அதாவது சாப்பிடுவது, பேசுவது என்று அதற்கு இரண்டு காரியம் இருப்பதாலேயே இரண்டையும் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். "வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி" என்கிறபோது சாப்பாடு, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவது தான் தாத்பர்யம்.

-ஜகத்குரு சந்திரசேகரேந்திரர்.

கண்
பாரத இதிகாசங்கள் கண்களைச் சிறப்பித்துக் கூறுகின்றன. கடவுளைக் 'கண்' கண்ட தெய்வம் என்று சொல்கிறது. 'கண்' நம் வாழ்க்கைக்கு வழி காட்டியாய் அமைந்திருக்கிறது. திருதராஷ்டிரனுக்கு 100 குழந்தைகள் இருந்தும் ஒருவனைக் கூட நல்வழியில், ஒழுக்க நெறியில் கொண்டு செல்ல அவனால் இயலாமற் போயிற்று. அதற்கு அடிப்படைக் காரணம் அவனுக்குக் கண் இல்லாமை தான். கண் இருந்திருந்தால் அவர்களையும் பாண்டவர்களைப் போல நல்லவர்களாக உருவாக்கியிருக்க முடியும்.

-20-04-1987.

Saturday, June 21, 2008

பாரதியார்

காதல் பாடல்களை இயற்றிய பல கவிஞ்ஞர்களும், 'அடுத்த பிறவியிலும் நாம் இணை சேர்ந்து இருப்போம்; எனக்கு நீயே மனைவியாவாய் , உனக்கு நானே கணவன் ஆவேன்' என்று தான் பாடியிருக்கிறார்கள். பாரதியார் ஒருவர் தான் 'அடுத்த பிறவியில் நான் நீயாகவும், நீ நானாகவும் பிறந்து இணைவோம் ' என்று பாடினான்.

- வலம்புரி ஜான் கூறக்கேட்டது.

"காலா, என் காலருகே வாடா, உன்னை என் காலால் மிதிப்பேன் "என்றான் பாரதி. நாம் யாரையாவது மிதிக்கவேண்டுமென்று நினைத்தால் போய்த்தான் மிதிப்போம். "நான் உன்னை மிதிக்கணும், பக்கத்தில் வாடா" என்று கூப்பிடமாட்டோம். உயிரைப் பறிக்க வருகிற எமனையே "டே காலா...." என்றான் பாரதி. இந்த ஆண்மை, தன்னம்பிக்கை தான் தமிழ்க் கவிஞ்ஞனுக்கே உள்ள பெரிய சொத்து. அதனால்தான் எருமை வாகனத்தில் வரும் காலன், பாரதியின் உயிரைப் பறிக்க யானை மீது அம்பாரி வைத்து வந்தான்.

- வைரமுத்துவின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் வலம்புரி ஜான் கூறியது. ஆனந்த விகடன் (03-09-1989).

'பக்தி பாடல்களை, காதல் பாடல்களை, வேதாந்தப் பாடல்களைப் பாட பாரதிக்கு முன் எத்தனையோப் பேர் இருந்தார்கள், ஆனால் தேசியம் பாட அவன் ஒருவனே இருந்தான்.

- ம.போ.சி கூறக்கேட்டது. (03-10-1985)

Friday, June 20, 2008

சைகோட் - Zygote

மிக சில உயிர்களுக்கு ஒரே செல்தான் உண்டு. அதுவே இரண்டாகப் பிரிந்து கரு உற்பத்தியாகிறது. அண்ட கோசத்திலிருந்து முட்டை வெளியாகி ஆண் அணுவுடன் கலந்து கர்ப்பப் பையில் வந்து சேர்ந்து கரு ஏற்படுகிறது. பெண்ணின் உடம்புக்குள் இருக்கும் ஒவ்வொரு செல் முட்டைக்கும் கோடிக்கணக்கில் செல்களை உற்பத்தி செய்யும் சக்தி உண்டு. ஆண் அணுவுடன் கலந்த உடன் இந்த சக்தி அதற்குக் கிடைக்கிறது. அத்தனை செல்களும் சேர்ந்து சிசு என்ற புதிய படைப்பு ஒன்றைப் படைக்கிறது. முட்டையும் ஆண் அணுவும் சேர்ந்து உண்டாகும் செல்லுக்கு 'சைகோட்' (zygote) என்று பெயர். ஒவ்வொரு சைகோட்டும் இரண்டாகி அந்த ஒவ்வொன்றும் இரண்டாகி - இப்படியே பிளந்து பெருகிக் கொண்டு போகின்றன. செல்கள் எண்ணிக்கையில் பெருகப் பெருக, ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை ஏற்படுகிறது. அந்த செல்களைக் கொண்டுதான் மனித உடம்பின் பல பகுதிகள் அமைகின்றன. ஒவ்வொரு
'செல்'லும் கொஞ்சம் கொஞ்சமாக மனித உடலாக உருப்பெறுகின்றன.


பாடி மெஷின் - 20-04-1987

Thursday, June 19, 2008

விளையாட்டுக் கணிதம்

41 x 34 ஐ கூட்டல் முறையில் கண்டு பிடிக்க:
41 ஐ 2 ஆல் வகுத்து மிதியை நீக்கி விட்டு, இடது புறம் எழுதவும்.
34-ன் 2 மடங்குகளை வலது புறம் எழுதவும்.
இடது புறத்திலுள்ள இரட்டை எண்களுக்கு நேராக உள்ள வலது புற எண்களை அடித்துவிட்டுக் கூட்டவும்.

(1)(2)நன்றி: கலைக்கதிர் - மார்ச் 1985

Wednesday, June 18, 2008

'ஆ', 'மா' அர்த்தம்?

ரம்ஜானும், கிறிஸ்துமஸ் பண்டிகையும் டிசம்பரில் வருகிறது. இது இப்படி இருக்க திருப்பாவை , திருவெம்பாவை பற்றி சைவ வைணவ பேதமாக சிலர் நினைப்பது என்?

திருப்பாவையின் 'முதல் பாட்டின் முதல் எழுத்து "மா".(மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்.....)


திருவெம்பாவையின் முதல் பாட்டின் முதல் எழுத்து "ஆ"(ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதியை.....).


ஆண்டாள் பாடிய 'மா' என்ற திருப்பாவைப் பாட்டின் முதல் எழுத்து , திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகரைக் குறிக்கும்.


அதேபோல மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை யின் முதல் பாட்டின் முதல் வரியான 'ஆ' என்பது திருப்பாவை பாடிய ஆண்டாளைக் குறிக்கும்.

காஞ்சி பெரியவர் கூறியது - 27-05-1985

மாயமான் இரகசியம்

இராமாயணத்தில் சீதை மானைப் பிடித்துக்கொண்டு வரும்படி இராமனைக் கேட்டபோது , வந்திருப்பது 'மாயமான்' என்று சொல்லிப் பேசாமல் இருந்திருக்கலாம். பின் என் அவர் போனார்? ஏற்கனவே மனைவியின் சொல்லைக் கேட்டு, இராமனைக் காட்டுக்குப் போகச் சொன்ன 'கெட்டப்பெயர்' தன் தந்தை தசரதனுக்கு வந்துவிட்டது. இப்பொழுது தான், மாய மானைத் தேடிப் போகாவிட்டால், அந்தக் கெட்டப் பெயர் சரித்திரத்தில் தந்தைக்கு மட்டுமே நிலைத்திருக்கும். அப்படித தந்தையின் பெயர் மட்டுமே 'மாசு' படுவதை விரும்பாத இராமர் தனக்கும் கொஞ்சம் வரட்டுமே என்று தான் மாய மான் பின்னால் போனார்.

நீடாமங்கலம் கிருஷ்ணமுர்த்தி பாகவதர்.
வானொலி உரை. குமுதம் - 10-01-1985.

சூரியன் - பொங்கல்

சூரியன் தென் திசை பயணத்தை முடித்துக்கொண்டு, வடதிசை பயணம் தொடங்குவதையே தை மாதம் உத்தராயணம் என்றும் சொல்கிறோம். அதையே பொங்கல், தமிழர் திருநாள் என்றும் சொல்கிறோம். அன்று தான் தேவர்களுக்கு இரவு முடிந்து பகல் பொழுது மலர்கிறது என்பது புராண வரலாறு. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள துரம் 93 மில்லியன் மைல். சூரியனின் மேற்புறத்தில் உஷ்ணம் 5500 செல்சியஸ் (10,000 ஃபாரன்ஹைட்). சூரிய கிரணங்களில் உள்ள நீல வண்ணத்தைத்தான் பூமி அதிகமாக உறிஞ்சுவதால் சந்திரனிலிருது பூமி நீல வண்ண கோளமாகத் தோன்றுகிறது.

தினமணி - பொங்கல் சிறப்பிதழ் - 14-01-1985.

Monday, June 16, 2008

அயணங்கள்

"ஸ்ரீ பாலா", எங்களின் இஷ்ட தெய்வம் .
அவளின் பெயர் தாங்கிய எங்கள் அன்பு பெயர்த்தி, இன்று காலையில் என்னிடம் வந்து, "என்ன தாத்தா,இன்று என்ன விசேஷம்" என்று கேட்டாள்.
நான், "இன்று விசேஷம் இருக்கட்டும், இன்று என்ன அயணம் தெரியுமா" என்று கேட்டேன்.
"அயணம் அப்படி என்றால் என்ன?" என்றாள். அயணம் என்றால் என்ன என்று சொல்ல தொடங்கினேன்.

பொதுவாகவே வருஷத்துக்கு இரண்டு அயணங்கள், ஆறு பருவங்கள் உண்டு. ஒன்று உத்ராயணம்; மாதங்களில் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி முடிய இருக்கும். இரண்டாவது தக்ஷ்ணாயணம்; ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி முடிய இருக்கும். சிறப்பாக அயணங்களில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகள் விசேஷமாக இருக்கும்" என்று சொல்லி முடித்தேன்.

இதை ஸ்ரீ ஜெயேந்திரர் 1985-ல் ஜனவரி மங்கை மாத இதழில் கூறியது.

Sunday, June 15, 2008

முதல் முதலாக...

Blogspot இணையத்தளத்தில் எனது முதல் முயற்சி. ஆரம்பத்தில் எனது முயற்சி சிறியதாக இருந்தாலும் பின்னர் மிக நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் நடந்த சில நிகழ்வுகள், தகவல்கள் முதலியவற்றை இங்கே தர விரும்புகிறேன்.

என் நாற்பது ஆண்டு ஆசிரியர் பணியில் நான் திரட்டிய தகவல் களஞ்சியங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.